யாருக்கு யார் முதல் ஸலாம்?



 
அன்பிற்குரியவர்களே!
சென்ற பதிவில் முதலில் யார் ஸலாம் சொல்வது என்பதற்கு அண்ணலார் (ஸல்) அவர்களின் அழகிய நடைமுறைப் பழக்கத்தைப் பார்த்தோம்.
           மனதிற்குள் எனக்கும் முந்திக் கொண்டு ஸலாம் சொல்ல வேண்டும் என்று ஆசைதான்! ஆனால் நான் சாலையில் செல்லும்போழுது எதிர்ப்படுபவர் வாகனத்தில் சென்றால் எப்படி ஸலாம் உரைப்பது?
           அல்லது நான் ஏதாவது வேலை கவனத்தில் அமர்ந்து இருந்தால் என்ன செய்வது? இப்படி பல வினாக்கள் மனதில் எழுகிறது.
           மனதில் எழும் எந்த ஐயங்களுக்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் விடையும், விளக்கமும் இல்லாமல் இல்லை.
           அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

يسلّم الرّاكب عل الماشي، والماشي علي القاعد، والقليل عل الكثير؛

           வாகனத்தில் செல்பவர் நடந்து செல்பவருக்கும், நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கும், (எண்ணிக்கையில்) குறைந்தவர்கள் அதிகமானவர்களுக்கும் (முதலில்) ஸலாம் சொல்லட்டும்.

           வாழும் கலையை கற்றுக் கொடுக்க அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முகமன் கூறும் முறையை இப்படி அழகாக விவரித்திருக்கிறார்கள். நடந்து செல்பவருக்கு வாகனத்தில் செல்பவர் முதலில் ஸலாம் கூறுவதே முறையாகும். இதன் மூலம் வாகனத்தில் செல்பவர் அடக்கத்தையும், பணிவையும் வெளிப்படுத்துவதோடு சகோதரரை மதிக்கின்ற பண்பாடும் வெளிப்படும். அத்தோடு நடந்து செல்பவர் வாகனத்தில் செல்பவருக்கு ஸலாம் கூறினால் வாகனத்தில் செல்பவரின் கவனம் திரும்பும், விபத்து ஏற்ப்படவும் வாய்ப்புண்டு. இவ்வாறே எண்ணிக்கையில் குறைந்தவர்கள் எண்ணிக்கையில் அதிகமானவர்களுக்கு முதலில் ஸலாம் உரைப்பதே முறையாகும்.
           எண்ணிக்கையில் குறைந்தவர்கள் முதலில் ஸலாம் கூறுவதே நடைமுறைக்கு எளிதாகவும், ஏற்றதாகவும் இருக்கும். இதெல்லாம் எக்காலத்திற்க்கும் ஏற்ற அழகிய நடைமுறைகள் என்பதற்காக கூறப்பட்ட அறிவுரையே தவிர, இதற்கு மாற்றமாக முகமன் கூறுவது தவறு என்று எடுத்துக் கொள்ளக் கூடாது.
           தீர்க்க தரிசனமான வழிகாட்டலே இந்த ஹதீஸ். இவ்வாறே நடந்து செல்பவர் அமர்ந்திருப்பவருக்கு முதலில் முகமன் கூறுவதே முறையாகும்.
           நீங்கள் வேலை நிமித்தம் ஒரு புதிய பகுதிக்குச் செல்கிறீர்கள். அந்தப் பகுதியில் அறிமுகமில்லாத மனிதர் அமர்ந்திருக்கிறார். அவர் வசிக்கும் பகுதியில் புதிதாக ஒரு மனிதரை பார்க்கும் பொழுது மனதில் அவருக்கு ஏற்ப்படக்கூடிய அச்சத்தையும், தவறான எண்ணங்களையும் நடந்து செல்லக்கூடிய உங்களின் ஸலாம் என்னும் முகமன் நீக்கிவிடும். அல்லது அமர்ந்திருப்பவர் ஏதேனும் வேலை கவனத்தில் இருக்கலாம். போவோர், வருவோரைப் பார்த்து அமர்ந்திருப்பவர் முதலில் முகமன் கூற வேண்டும் என்பது அவருக்கு சிரமமாகிவிடும். எனவேதான், ஏந்தல் நபி அவர்கள் எக்காலத்திற்க்கும் ஏற்ற முறையை இந்த ஹதீஸ் மூலம் நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள். அண்ணலாரின் அழகிய வழிமுறையை பின் பற்றி நடக்க அல்லாஹ் நம் அனைவருக்கும் உதவிபுரிவானாக! ஆமீன்!

0 கருத்துகள்:

 
Download this Blogger Template From Coolbthemes.com