ஆலோசனை




 



 அன்பானவர்களே!

                     அஸ்ஸலாமு அலைக்கும்!

                ஒரு குடும்பமாகட்டும், ஒரு நிறுவனமாகட்டும் அல்லது ஆளும் அரசு, அதன் அலுவலகங்களாகட்டும் அனைத்து துறையிலும் ஆலோசனை’ (مشورة) என்ற ஒன்று இல்லையென்றால் குடும்ப அளவில் குழப்பம்; நிறுவனமாக இருந்தால் நிலைதடுமாறல்; அரசு அலுவலகமாக இருந்தால், சக ஊழியர்களிடையே ஈகோ எனும் பெருமையால் ஒத்துழையாமை என நிலை தடுமாறல் ஏற்படும்.

                இதனால்தான் பெரிய நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற துறைகளில் ஆலோசனைக் கூடம் (meeting hall) என தனி இடம் அழகு மிளிர குளிர்சாதன வசதியுடன் வைத்திருப்பார்கள். தலைமை அதிகாரி சக ஊழியர்களுடன் கலந்தாலோசிக்கும்போது அந்த அதிகாரிக்கு கடைநிலை ஊழியர் முதல் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதுடன் அனைத்து நிலையிலும், அந்த அதிகாரிக்கு துணை இருந்து அத்துறை ஓங்கி வளர்ந்து வெற்றியடைய  துணைபுரிகிறார்கள்.

                ஒரு குடும்பத் தலைவன் தன் குடும்பத்தில் குழந்தைகள் மற்றும் தன் இல்லத்தின் பெரியவர்களுடன் அன்புடன் குழுவாக அமர்ந்து, தன்னுடைய வருமானம், குடும்ப செலவீனம், இளையோர், பெரியோர் பண்பாடு மற்றும் எதிர்கால திட்டங்கள் போன்றவைகளில் கருத்துப் பரிமாற்றம் செய்யும்பொழுது, குடும்பத்தில் உள்ள அனைவருமே தங்களின் குடும்பம் சிறந்து விளங்க தங்களது பங்களிப்புகளை அக்குடும்பத் தலைவனுக்கு வழங்கக்கூடியவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

                ஆலோசணை வழங்குவதும், பெருவதும் தர்மமான செயல். அத்துடன் முஃமின்களின் உயர்ந்த பண்பாடு, சிறந்த செயல் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முஃமின்களின் நடைமுறை ஒழுக்கத்தை சொல்லும்போது;



وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَىٰ بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ

42:38. இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்.

என்று கலந்தாலோசிப்பது உயர்வான பண்பாடு என்பதை உயர்ந்தோன் அல்லாஹ் உலகுக்கு உணர்த்திக் காட்டுகிறான்.


                பத்ரு போரின்போது நபிகளார் (ஸல்) அவர்கள் பத்ரு பெருவெளியில் இருந்த நீரூற்றின் கீழ் பகுதியில் தங்கள் படை தங்க ஏற்பாடு செய்தார்கள். அது சமயம் ப்பாப் பின் முன்திர் (ரலி) என்ற நாயகத் தோழர், பெருமானாரே! தங்கும் இடத்தை தேர்வு செய்திருப்பது இறையாணையா? அல்லது தங்கள் விருப்பமா? என்று வினவ, பெருமானார் (ஸல்) அவர்கள் இது இறையாணையல்ல என்று பதில் கூறினார்கள்.

                அப்படியானால் தங்கள் மேலான கவனத்திற்கு! நாம் நீர் பிடிப்பின் மேற்பகுதியில் தங்குவதே ஏற்றதாகும். நாம் கீழ் பகுதியில் இருந்தால் எதிரிகள் நமக்கு தண்ணீர் கிடைக்க விடாமல் தடுத்துக் கொள்வார்கள். மேலும், மழை பொழிந்தால் இந்த நீர்ப்பிடிப்பின் கீழ் பகுதி சேறும், சகதியுமாக இடையூறு ஏற்பட்டு விடும் என்று அத்தோழர் சொன்னார். அதை செவியுற்ற நபிகளார் அவரின் சமயோசித அறிவைப் பாராட்டியதோடு, அவரின் கருத்தை வரவேற்று செயல்படுத்தினார்கள். இஸ்லாமிய படை மேல்புறமும், இறைமறுப்பாளர் படை கீழ்புறமும் இருந்தார்கள். இரவு மழை பெய்தது. மேல்புறம் மணல்பாங்கான பூமி. கீழ்புறம் மண்சார்ந்த பூமியாதலால் சகதியாக எதிரிப் படை நடப்பதற்க்கே இடையூறாக அமைந்தது. இஸ்லாமியப் படை வென்றது. இது நாடறிந்த வரலாறு. அதன் அடித்தளம் ஆலோசனை என்னும் உயரிய நடைமுறை என்பதை மனதில் நிறுத்தி நாம் வாழும் வாழ்வில் தகுந்தவர்களிடம் (நல் மனிதர்) நல் ஆலோசனை பெற்று செயல்படுவோமானால் தோல்வி இல்லாத பரக்கத்தான வாழ்க்கை கிடைக்கப் பெறுவோம்! இன்ஷா அல்லாஹ்!

                ஆலோசனை என்ற கலந்தாலோசிக்கும் பழக்கம் நம்மிடம் நடைமுறையில் வந்துவிட்டால் தனி மனிதர்களிடம் பெருந்தன்மை, பணிவு என்ற உயரிய குணங்கள் குடி கொண்டுவிடும். அதுதான் உயர்ந்தோன் அல்லாஹ்வின் நோக்கம்!


அல்லாஹூ அக்பர்!!!


அனைத்தையும் இழந்தும்

இறைவன் மேல் நம்பிக்கை

இருந்தால், நீங்கள்

இழந்தது எதுவுமில்லை!

அனைத்தும் இருந்தும்

இறைவன் மேல் நம்பிக்கை

இல்லையெனில், உங்களிடம்

இருப்பது எதுவுமேயில்லை!


1 கருத்துகள்:

Unknown said...
This comment has been removed by a blog administrator.
 
Download this Blogger Template From Coolbthemes.com