இன்பம் தரும் இஸ்திஃபார்




 


அஸ்ஸலாமு அலைக்கும்! (வரஹ்) 

           நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'மனிதர்கள் அனைவரும் குற்றம் புரிபவர்களே! குற்றம் புரிவோரில் சிறந்தவர் அதிக பாவ மன்னிப்பு கோருபவரே!’ ஆவார்.
           இன்றைய நாகரீக உலகில் மனிதனுக்கு மனிதன் சிறு தவறு இழைத்து விட்டால் கூட உடனுக்குடன் ஸாரி வருந்துகிறேன் என்று சொல்லி விடுகின்றோம். சிலர் தப்புக்கு மனம் பொருத்துக்கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல் வழக்கமுண்டு. இப்படி சொல்வதனால் அந்த தவறின் மூலம் மன வருத்தங்களை அல்லது வேதனையை மறந்து விடுவதை அன்றாடம் பார்க்கிறோம். நற்பண்புகளில் ஒன்றாக தவறுக்கு வருந்தும் பழக்கத்தை கருதுவதால்தான் சிறு பிள்ளைகளுக்கும் அதனை கற்றுக் கொடுக்கிறோம்.
           மனிதன் சக மனிதனிடம் மன்னிப்பு கேட்பதையே இவ்வளவு உயர்வாக கருதும்போது இறைக்கட்டளைகளை  சரிவர நிறைவேற்றாமலும், இறைவனால் விளக்கப்பட்ட செயல்களை செய்யும்போதும் இறை கோபத்திற்கு ஆளாக நேரிடுவதை உணர்ந்து , பயந்து பாவமன்னிப்பு கேட்பது எவ்வளவு முக்கியமானது என்பதை சிந்தித்துணர வேண்டும்.
           மனிதர்கள் எல்லோரும் குற்றம் புரிபவர்களே. செய்த குற்றம் பிற மனிதர்களின் உரிமை தொடர்பானதாக இருந்தால் பாதிக்கப் பட்டவருக்கு பரிகாரம் வழங்குவதன் மூலம் அந்த பாவத்திற்கு பரிகாரம் தேடி விடலாம். செய்த பாவம் இறைவன் தொடர்பானதாக இருந்தால் உள்ளம் நெகிழ இறைவனிடம் பாவ மன்னிப்பு கோர வேண்டும் என்பதே அல்குர்ஆன் கூறும் வழிமுறையாகும்.

 وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ  


ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا


 4:110. எவரேனும் ஒரு தீமையைச் செய்துவிட்டு, அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து பின்னர் அவர் (மனப்பூர்வமாக) அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்பாரானால் - அவர் அல்லாஹ்வை மன்னிப்பவனாகவும் மிக்க கருணை உடையவனாகவும் காண்பார்.
           அண்ணலார் கூறினார்கள், முஃமின்களே! அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோருங்கள். ஏனெனில் நான் ஒவ்வொரு நாளும் இறைவனிடம் நூறு முறை பாவமன்னிப்புக் கோருகிறேன், என்று முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நம் நபிகளார் சொன்னார்கள்.
           இன்னும் சைய்யிதுனா இப்ராஹிம் (அலை) அவர்கள் தனது மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களையும் சேர்த்துக் கொண்டு இறை உத்தரவுக்கிணங்க இறை ஆலயத்தை (கஃபா) கட்டி முடித்தவுடன் இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரினார்கள் என்கிறது அல்குர்ஆன். (2;128)
           இதன் அடிப்படையில் நாம் செயல் படுத்திவரும் கடமையான தொழுகை, அருள்மிகு நோன்பு, அன்பு மிகைக்கும் ஜகாத், ஆழமான ஈமானைக் கொடுக்கும் ஹஜ் போன்ற உயர்வான இபாதத்துகள் மற்றும் உபரியான தராவீஹ், தஹஜ்ஜுத் போன்ற நபில் வணக்கங்கள் புரிந்தாலும் நாம் அறியா வண்ணம் குறைகள் ஏற்பட்டு இருக்கும். அக்குறைகளைக் கண்டு கொள்ளாமல் பூரணமான நற்கூலியை இறைவன் வழங்குவதற்கு உயர்ந்தோன் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருவது அவசியம்தானே! அதிலும் புனிதமிக்க ரமலான் மாதத்தில் கேட்கப்படும் பாவ மன்னிப்பு உடனுக்குடன் மன்னிக்கப் படும்பொழுது இவ்வருள் ரமலானின் புனித நாட்களில் அதிகமதிகம் இஸ்திஃபார் ஓதுவோமாக!
யா அர்ஹமர் ராஹிமீன்
எங்கள் பிழை பொறுத்து
எங்கள் இபாதத்துகளை கபூல்
செய்வாயாக! ஆமீன்!
 
Download this Blogger Template From Coolbthemes.com