மரணத்தின் முகவரி





அஸ்ஸலாமு அலைக்கும்! (வரஹ்)
          சென்ற பதிவில் இறப்பு என்பது இடமாற்றம்தான், இழப்பு அல்ல. மவ்த் எனும் மறைவு உயர்வான அல்லாஹ்வின் அருட்கொடைதான் என்பதை சொல்லி இருந்தேன்.
          இப்பதிவில் இறப்பு என்பது இறைவனின் அளப்பெரும் அருள் என்பதை பகிர்ந்து கொள்கிறேன்.
          வாழப்பிறந்த மனிதர்கள், அந்த வாழ்க்கையை பல நிலைகளில் வாழ்கின்றனர். மனநிறைவடைந்தோர் சிலர். வியாதியினால் வாழ்வை வெறுத்தோர் சிலர். துன்பம், கவலைகளினால் விரக்தியடைந்தோர் பலர்.
          எந்த நிலையில் வாழ்ந்தாலும், ஒரு காலகட்டத்தைக் கடக்கும் போது மரணத்தை வரவேற்கவே செய்கின்றனர்.
          கடுமையான நோயினால் பாதிக்கப் பட்டு, அந்த நோய் குணம் ஆகும் நிலையில் இல்லை என்று நிச்சயமாக தெரிந்து விட்டவர்கள் மரணத்தை விரும்பி வரவேற்கவே செய்கின்றார்கள். இத்தகைய நிலையில் உள்ளவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்கும், கருணைக் கொலைக்கும் தள்ளப்படுவதையும் நாம் காண்கின்றோம்.
          கைபர் யுத்தத்தின் போது இஸ்லாமிய அணியை சேர்ந்த ஒரு சகாபி மூர்க்கமாகப் போரிட்டார். அவரின் வீரத்தைக் கண்ட மற்ற சகாபாக்கள் பாராட்டினார்கள். அதனை செவியேற்ற பெருமானார் (ஸல்) அவர்கள், அவர் நரகவாதி என்றார்கள். பெருமானாரின் இந்த கூற்று ஸகாபாக்களுக்கு ஆச்சர்யத்தை தந்தது. பெருமானாரின் அறிவிப்புக்கான காரணத்தை அறிய விரும்பிய ஒரு சகாபி, குறிப்பிட்ட அந்த சகாபியை பின் தொடர்ந்து அவரின் செயல்களை கவனிக்களானார். பெருமானார் குறிப்பிட்ட அந்நபர் போரில் எதிரியால் கோரமாக தாக்கப்பட்டார். அந்த காயத்தின் வேதனை தாங்க இயலாமல், அந்த மனிதர் வாளை பூமியில் நட்டி வைத்து அதன் மீது பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரை பின் தொடர்ந்த சகாபி பெருமானாரிடம் வந்து, தாங்கள் கூறியது உண்மையாகிவிட்டது என்று கூறினார். (நூல்; புகாரி)
          தீராத நோயால் தாக்குண்ட மனிதன் மரணத்தை விரும்பி ஏற்க தயாராகி விடுகின்றான் என்பதால் அண்ணலார் (ஸல்) அவர்கள் அத்தகைய எண்ணம் கொள்வதைத் தடுத்தார்கள்.
          தனக்கு ஏற்பட்ட துன்பத்தினால் எவரும் மரணத்தை விரும்பி வரவேற்க வேண்டாம். அவசியமாகின் ‘ யா அல்லாஹ்! நான் இவ்வுலகில் இருப்பது நல்லதாக இருக்கும் காலம் வரை என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் மரணமடைவது நல்லதாக இருந்தால் எனக்கு மரணத்தைத் தருவாயாக! என்று பிரார்த்தனை புரியலாம் என்றார்கள்.
          நோயின் கடுந்தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மரணம் என்பது பெரும் அருட்க்கொடையல்லவா?
    
 
Download this Blogger Template From Coolbthemes.com