இறைவனின் அழைப்பு...இதயத்தின் இறப்பு



அன்பானவர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்!
             இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் அழைப்புஎனும் நிகழ்வை எதிர்கொள்ளக் கூடியவர்களாத்தான் வாழ்க்கை ஆரம்பமாகிறது.
             குழந்தைப் பருவத்தில் பெற்றோரின் அழைப்பு; பள்ளி பருவத்தில் ஆசானின் அழைப்பு; திருமணத்திற்க்குப் பிறகு ஆணாக இருந்தால், மனைவியின் அழைப்பு, பெண்ணாக இருந்தால் கணவனின் அழைப்பு; நாம் எந்தத் துறையில் வேலை செய்கிறோமோ, அத்துறையின் மேலாளரின் அழைப்பு இப்படி எந்த நேரமும் நம்மை யாராவது அழைக்கப் படுபவராகத்தான் ஒவ்வொரு மனிதரின் வாழ்க்கையின் ஆரம்பமே ஆரம்பிக்கின்றது.
             ஜனனம் எனும் பிறப்பு நிகழ்ந்து விட்டால், மரணம் எனும் இறப்பு நம்மை எந்த நேரத்திலும் அழைக்கும்.
             எப்படி தான் சார்ந்த துறையில் தன் மேலாளர் எந்த நேரத்திலும் அழைக்கலாம் என்று, அதற்கு தகுந்த தயாரிப்புகளை தயார் செய்து முன்னெச்செரிக்கையுடன் தத்தமது வேலைகளில் குறை நிறைகளை சீர் செய்து தெளிவாக மகிழ்ச்சியாக எதிர் கொள்கிறோமோ, அதைப் போன்றே, தன் எஜமான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அழைப்பை எதிர்கொள்ளக் கூடிய தயார் நிலையில் உள்ளத்தையும், வாழ்க்கை நடைமுறைகளையும் பக்குவப் படுத்திக் கொள்ள வேண்டும்.
             இறப்பு எனும் இறைவனின் அழைப்பு நமக்கு  இழப்பு அல்ல, உயிரின் இடமாற்றம் என்பதை அல்குர்ஆனும், அண்ணல் நபியின் அறிவிப்பும் நமக்கு அறிவுறுத்துகின்றன.


ٱلَّذِى خَلَقَ ٱلۡمَوۡتَ وَٱلۡحَيَوٰةَ لِيَبۡلُوَكُمۡ أَيُّكُمۡ 
أَحۡسَنُ عَمَلاً۬‌ۚ وَهُوَ ٱلۡعَزِيزُ ٱلۡغَفُورُ 

67:2. உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.

             உயர்ந்தோன் அல்லாஹ் உடலை படைப்பதற்க்கு முன்பே உயிரை படைத்து “ஆலமே அர்வாஹ்” என்ற சூட்சும உலகில் வாழ்ந்து வருமாறு செய்து கொண்டிருந்ததாக நபிகளின் ஹதீஸ் நினைவுறுத்துகிறது.
             “எல்லா உயிர்களும் பெரும்பட்டாலங்களாக குழுமியிருந்தன; அப்பொழுது பரிச்சயமானவை, இப்பொழுதும் அறிமுகமகி வாழ்கின்றன. அப்பொழுது அறிமுகமில்லாதிருந்தவை, இப்பொழுதும் சந்திக்காமலேயே வாழ்கின்றன,” என நபிகள் (ஸல்)
அவர்கள் உயிர்களின் உலகத்தை விளக்குகிறார்கள். (முஸ்லிம்)
             ஆம் அன்பர்களே, இறப்பு என்னும் அழைப்பு இடமாற்றம் தான். தான் செய்யும் தொழில் இடம் மாறினால் பதவி, ஊதியம், மரியாதை எல்லாம் உயர்வது (promotion) போல் இறப்பு எனும் இடமாற்றம் அல்லாஹ்வின் அருட்கொடை!!!
             மரணம் அல்லாஹ்வின் அருட்கொடை என்பதை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்வோம். இன்ஷாஅல்லாஹ்! மஅஸ்ஸலாம்!
        

இஸ்லாமும் சமாதானமும்




 




அன்பானவர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்!
               
               உண்மை, அன்பு, அடக்கம், தயாளம், மன்னிப்பு, மனித நேயம், மத சகிப்புத்தனமை, சமூக ஒற்றுமை இப்படி உயர்குணங்கள் என்னென்ன உள்ளனவோ, அத்தனையும் தன்னுள் ஐக்கியமானவர்கள்தான் சாந்த நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், என்று உலக அளவில் உள்ள வரலாற்று ஆய்வாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட மாசற்ற மாமனிதர் என்று புகழுதற்குரியவர்கள் முகம்மது (ஸல்) அவர்கள். வாழ்க்கையில் எந்த நிலையிலும் அவர்கள் தீவிரமான போக்கை கையாண்டதில்லை.
                நடுநிலையான, அமைதியான போக்கும், சாந்தமான பேச்சும்தான் அவர்களின் மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்தது.

لَّقَدۡ كَانَ لَكُمۡ فِى رَسُولِ ٱللَّهِ أُسۡوَةٌ حَسَنَةٌ۬ لِّمَن كَانَ يَرۡجُواْ ٱللَّهَ
وَٱلۡيَوۡمَ ٱلۡأَخِرَ وَذَكَرَ ٱللَّهَ كَثِيرً۬ا

33:21. அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.

 என்ற உயர்ந்தோன் அல்லாஹ்வின் ஆணைக்கேற்ப மத சகிப்புத்தன்மையில் நபிகளாரின் முன்மாதிரியைப் பின்பற்ற விரும்புவோருக்கு ஹூதைபியாஉடன்படிக்கை ஒரு முன்மாதிரியாகும். அண்ணலாரும், அவர்கள் போதித்த இஸ்லாமும் தீவிரவாதத்திற்கு எவ்வளவு முரண்பாடானது என்பதை உணர்த்த ஹூதைபியாஉடன்படிக்கை என்ற வரலாற்று நிகழ்வே போதுமானது.
                நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கள் தோழர்கள் மத்தியில் தான் கஃபத்துல்லாஹ்வை தவாப் செய்வதாக கனவு கண்டதாக கூறினார்கள். அப்படியானால் நாம் உம்ராவுக்கு போய் வருவோம் என்று தோழர்கள் கூறினார்கள். நண்பர்களின் ஆவலைக் கண்ட பெருமானாரும் அனுமதி வழங்கினார்கள். ஆயிரத்து ஐநூறுக்கும் மேலான தோழர்களுடன் அண்ணலாரும் உம்ராவுக்கு இஹ்ராம் அணிந்து மக்கா நோக்கி பயணமாகிறார்கள்.
                உம்ராவுக்குச் சென்ற அந்த குழு ஹூதைபியா என்னும் இடத்தில் மக்காவைச் சேர்ந்தவர்களால் தடுத்து நிறுத்தப் படுகிறார்கள். புனிதப் பயணம் மேற்க்கொண்ட பெருமானார் (ஸல்) அவர்கள் போர் புரிவதை விரும்பவில்லை. புனித பிரயாணிகளை தடுப்பதற்கு மக்கா வாசிகளுக்கு எவ்வித உரிமையும் இல்லை. அவ்வாறு இப்புனிதப் பயணத்தைத் தடுக்க முயலுவார்களாயின் அவர்களிடம் யுத்தம் செய்வது தவிர வேறு வழியில்லை என்று தோழர்கள் கருத்துத் தெரிவித்ததோடு, தயாராகவும் இருந்தார்கள்.
                எப்பொழுதும் சமாதானத்தையே விரும்பும் சாந்த நபி  அவர்கள், இந்த முறையும் மக்கவாசிகளுடன் சமாதான உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்கிறார்கள். அதுதான்
ஹூதைபியாஉடன்படிக்கை என்று சரித்திரத்தில் குறிக்கப் பட்டிருக்கிறது.
இந்த ஆண்டு நீங்கள் திரும்பிச் சென்றுவிட வேண்டும். அடுத்த ஆண்டு வாருங்கள். அப்பொழுது மூன்று நாள் சுதந்திரமாக தவாப் செய்ய அனுமதி வழங்குகிறோம். தற்பொழுது மக்காவில் இருப்பவரில் யாராவது உங்களுடன் வந்தால், அவர்களை எங்களுடன் திருப்பி ஒப்படைத்துவிட வேண்டும். ஆனால் மதீனாவில் இருப்பவரில் எவராவது மக்காவுக்கு வந்தால், அவர்களை நாங்கள் உங்களிடம் ஒப்படைக்க மாட்டோம்! என்பன போன்ற மதீனா வாசிகளுக்கு பாதகமான ஒருதலை பட்சமான கோரிக்கையை ஏற்று அதை ஒப்பந்தமாக அண்ணலார் எழுதிக்கொடுத்தார்கள்.
           எழுதப்பட்ட அந்த ஒப்பந்தத்தை வாசித்துக் காட்டும்பொழுது, “இது அல்லாஹ்வின் தூதரான முஹம்மது எழுதிக் கொடுத்ததுஎன்றிருந்த வாசகத்தை நீக்குமாறு மக்கா வாசிகள் கூறினார்கள். “அல்லாஹ்வின் தூதர்என்பதுதானே நமக்கிடையே கருத்து வேறுபாடு தோன்றக் காரணம். எனவே அந்த வாசகத்தை நீக்கிவிட்டு, “இது அப்துல்லாஹ்வின் குமாரர் முஹம்மது எழுதிக்கொடுத்ததுஎன்று மாற்றி எழுதுமாறு அவர்கள் கூறினார்கள். நபிகளார் அதற்கும் சம்மதித்தார்கள். ஒப்பந்தத்தை எழுதிக்கொண்டிருந்த ஹல்ரத் அலி (ரலி) அவர்களிடம் அந்த வரியை நீக்கிவிடுமாறு அண்ணலார் கூறினார்கள். ஆனால் அந்த வரியை நீக்குவதற்கு என் கைக்கு சக்தி கிடையாது என்று கூறி அலி (ரலி) மறுத்துவிட்டார்கள். பின்னர் எழுதுகோலை அண்ணலார் தானே வாங்கி, எந்த இடம் என்ற தகவல் அறிந்து அந்த வரியை நீக்கினார்கள்.
           அண்ணலார் மக்கா வாசிகளுடன் உடன்படிக்கை செய்ய முன் வந்ததும், அவர்கள் எதையெல்லாம் சொன்னார்களோ அதற்க்கெல்லாம் சம்மதித்ததும், எல்லாவற்றிற்கும் மேலாக தங்கள் உயிரிலும் மேலான முஹம்மதுர்ரஸூலுல்லாஹ்என்ற வாசகத்தை ஒப்பந்தத்திலிருந்து நீக்கியதும் நண்பர்களுக்கு மிகப்பெரும் மனச் சங்கடத்தை ஏற்ப்படுத்தியது. போர் தொடுக்க நம்மிடம் வழுவான காரணம் இருக்கும்போது, அதற்கு வீரர்களும் தயாராக இருக்கும்போது இந்த அளவு அவர்களிடம் பணிந்து போக வேண்டுமா? இது நமக்கு பெரும் தோல்வியல்லவா? என்று தோழர்கள் ஆதங்கமும், ஆத்திரமும் பட்டார்கள்.
           ஆனால், நபிகளாரின் நண்பர்கள் எதைத் தோல்வி என்று கருதினார்களோ, அதையே அல்லாஹூத்தஆலா பெரிய வெற்றி என்று கூறுகிறான்.

إِنَّا فَتَحۡنَا لَكَ فَتۡحً۬ا مُّبِينً۬ا

48:1. (நபியே!) நிச்சயமாக நாம் ஒரு தெளிவான வெற்றியாக உமக்கு வெற்றி அளித்துள்ளோம்.­­­­

    என்று ஹூதைபியா உடன்படிக்கை பற்றி உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்.

            ஆம் அன்பர்களே! இஸ்லாத்தை எந்த கோணத்தில் சிதைக்க நினைத்தாலும், உலக மக்களெல்லாம் ஒன்று கூடி இஸ்லாத்தை கொச்சை படுத்த நினைத்தாலும் எப்பொழுதும் ஒரே நிலையாக சூரியன் போல் இலங்கிக் கொண்டே இருக்கும்.

அல்லாஹ் மிகைத்தவன்!

அல்லாஹூ அக்பர்!





                                                                                                                                               
 
Download this Blogger Template From Coolbthemes.com