நோன்பின் மான்பு





அன்புடையீர்!
அஸ்ஸலாமு அலைக்கும்!
           ஆரம்பமும் முடிவும் இல்லா இறைவன் அல்லாஹ் ஜல்ல ஜலாலுஹு தன்னுடைய கோடானு கோடி படைப்புகளில் ஆச்சர்யமான, அபூர்வமான பல பல படைப்புகளைப் படைத்துள்ளான்.
           அப்படைப்புகளில் மனிதனை தன்னுடைய பிரதிநிதியாக தேர்ந்தெடுத்துள்ளான். கலீபா என்ற மகத்தான பதவியுள்ள மனிதனுக்கு அனைத்து செயல்களும் சொல்லிக் கொடுக்க, பயிற்சி கொடுக்க வேண்டியுள்ளது.
           மற்ற உயிரினங்கள் தன் தாயின் வயிற்றிலிருந்து வெளியானவுடன் தானாக எழுந்து, நடந்து தன் தாயிடம் மடியில் முட்டி தானாக பால் குடிக்கும்.
           ஆனால், ஆறு அறிவுள்ள உயர்வான மனிதனுக்கு தன் தாயின் மார்பில் எப்படி சுவைத்து பால் குடிக்க வேண்டும் என்பது முதல் நடப்பது, பேசுவது, தூங்குவது என்று ஒவ்வொரு அசைவுக்கும் பயிற்சி கொடுக்கவேண்டியுள்ளது.
           பலம் மிக்க வனவிலங்குகள், வண்ண வண்ண பறவைகள், அழகழகான நீரினங்கள் என்று மனிதன் வியக்கும் இறைவனின் படைப்புகள் பல பல. இவைகளில் மனித இனத்தை உயர்ந்த படைப்பு என்று அல்லாஹ் அறிவித்து விட்டான்.
           இவ்வுயர்ந்த படைப்புக்கு இறையச்சம், இறைவழிபாடு, இறைக்கட்டுப்பாடு என்று பலவித பயிற்சிகள் கொடுக்க வேண்டியுள்ளது.
           உலக நடைமுறையில் இராணுவ அதிகாரி முதல் சின்ன சின்ன தொழில் துறைகள் வரை அந்த அந்த வேலைக்குத் தகுந்த பயிற்சி தேவை படுகிறது. சில வரைமுறைகளோடு பயிற்சி செய்தால்தான் வேலையும் கிடைக்கும்.
           ஆரம்பம் இல்லா அல்லாஹ்வின் பிரதிநிதியிடம் அல்லாஹ்வின் உயர் குணங்கள் பிரதிபலிக்க வேண்டும். முடிவில்லா அல்லாஹ்வின் குணங்கள் அமைய மனிதன் வாழ்கையில் எடுக்கும் பயிற்சி காலம்தான் ரமலான் மாதம்.
           ரமலான் என்ற புனித மாதத்தில் நோன்பு இருந்து உள்ளத்திற்கு பயிற்சி கொடுக்க வேண்டும். அண்ணல் நபி (ஸல்) கூறினார்கள்…..
           இளைஞர்களே! உங்களில் திருமணம் செய்து கொள்ள சக்தி பெற்றோர் திருமணம் செய்து கொள்ளட்டும். (அதற்கு) இயலாதோர் நோன்பு நோற்றுக் கொள்ளட்டும். ஏனெனில், நோன்பு
(ஆசையை) கட்டுப் படுத்தக்கூடியதாகும். (புஹாரி)
           நோன்பு என்ற செயல் மனிதனின் அற்பமான சிந்தனைகள், செயல்கள் அனைத்திற்கும் அணைபோட்டு சிறந்த சிந்தனைகளை கொடுக்கிறது. மனிதனை மகத்தான செயல்களைச் செய்ய வைக்கின்றது.
நோன்பினால் என்ன பயன்?
அல்லாஹ்வின் அருள் மறை இரண்டு வார்த்தையில் சொல்லிவிட்டது,
لعلّكم تتّقون  
(இதனால்)"நீங்கள் இறையச்சமுடையோர் ஆகலாம்"
( 2;183) என்று அல்லாஹ் தெரிவித்துள்ளான்.
அதோடு பயிற்சியில் எல்லோரும் வெற்றி பெருவதில்லை என்பதையும் لعلّكم – நீங்கள் ஆகலாம் என்ற இடம்பாடான சொல்லை பயன்படுத்தியுள்ளான்.
           வாழும் வாழ்க்கையில் இறையச்சம் இருந்துவிட்டால் இறைவனின் திருக்குணங்கள் மனித வாழ்வில் மணக்கும்.
           மணமான, மான்பான வாழ்க்கைக்கு இப்புனித ரமலானில் பயிற்சி கொண்டு வாழும் காலமெல்லாம் இறையச்சம் மிகுந்த வாழ்க்கையாக அமைத்துக்கொள்ள மனப் பயிற்சி செய்து கொள்ள வேண்டும். இன்ஷாஅல்லாஹ் அல்லாஹ் நம்மை அழகிய பிரதிநிதியாக ஏற்றுக்கொள்வான்.
           இப்புனித ரமலானின் அனைத்து அருளையும் நம் அனைவருக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக! ஆமீன்!
 
Download this Blogger Template From Coolbthemes.com