ஆலோசனை




 



 அன்பானவர்களே!

                     அஸ்ஸலாமு அலைக்கும்!

                ஒரு குடும்பமாகட்டும், ஒரு நிறுவனமாகட்டும் அல்லது ஆளும் அரசு, அதன் அலுவலகங்களாகட்டும் அனைத்து துறையிலும் ஆலோசனை’ (مشورة) என்ற ஒன்று இல்லையென்றால் குடும்ப அளவில் குழப்பம்; நிறுவனமாக இருந்தால் நிலைதடுமாறல்; அரசு அலுவலகமாக இருந்தால், சக ஊழியர்களிடையே ஈகோ எனும் பெருமையால் ஒத்துழையாமை என நிலை தடுமாறல் ஏற்படும்.

                இதனால்தான் பெரிய நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் போன்ற துறைகளில் ஆலோசனைக் கூடம் (meeting hall) என தனி இடம் அழகு மிளிர குளிர்சாதன வசதியுடன் வைத்திருப்பார்கள். தலைமை அதிகாரி சக ஊழியர்களுடன் கலந்தாலோசிக்கும்போது அந்த அதிகாரிக்கு கடைநிலை ஊழியர் முதல் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவதுடன் அனைத்து நிலையிலும், அந்த அதிகாரிக்கு துணை இருந்து அத்துறை ஓங்கி வளர்ந்து வெற்றியடைய  துணைபுரிகிறார்கள்.

                ஒரு குடும்பத் தலைவன் தன் குடும்பத்தில் குழந்தைகள் மற்றும் தன் இல்லத்தின் பெரியவர்களுடன் அன்புடன் குழுவாக அமர்ந்து, தன்னுடைய வருமானம், குடும்ப செலவீனம், இளையோர், பெரியோர் பண்பாடு மற்றும் எதிர்கால திட்டங்கள் போன்றவைகளில் கருத்துப் பரிமாற்றம் செய்யும்பொழுது, குடும்பத்தில் உள்ள அனைவருமே தங்களின் குடும்பம் சிறந்து விளங்க தங்களது பங்களிப்புகளை அக்குடும்பத் தலைவனுக்கு வழங்கக்கூடியவர்களாக ஆகிவிடுகிறார்கள்.

                ஆலோசணை வழங்குவதும், பெருவதும் தர்மமான செயல். அத்துடன் முஃமின்களின் உயர்ந்த பண்பாடு, சிறந்த செயல் என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முஃமின்களின் நடைமுறை ஒழுக்கத்தை சொல்லும்போது;



وَالَّذِينَ اسْتَجَابُوا لِرَبِّهِمْ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَمْرُهُمْ شُورَىٰ بَيْنَهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ

42:38. இன்னும் தங்கள் இறைவன் கட்டளைகளை ஏற்று தொழுகையை (ஒழுங்குப்படி) நிலைநிறுத்துவார்கள் - அன்றியும் தம் காரியங்களைத் தம்மிடையே கலந்தாலோசித்துக் கொள்வர்; மேலும், நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (தானமாகச்) செலவு செய்வார்கள்.

என்று கலந்தாலோசிப்பது உயர்வான பண்பாடு என்பதை உயர்ந்தோன் அல்லாஹ் உலகுக்கு உணர்த்திக் காட்டுகிறான்.


                பத்ரு போரின்போது நபிகளார் (ஸல்) அவர்கள் பத்ரு பெருவெளியில் இருந்த நீரூற்றின் கீழ் பகுதியில் தங்கள் படை தங்க ஏற்பாடு செய்தார்கள். அது சமயம் ப்பாப் பின் முன்திர் (ரலி) என்ற நாயகத் தோழர், பெருமானாரே! தங்கும் இடத்தை தேர்வு செய்திருப்பது இறையாணையா? அல்லது தங்கள் விருப்பமா? என்று வினவ, பெருமானார் (ஸல்) அவர்கள் இது இறையாணையல்ல என்று பதில் கூறினார்கள்.

                அப்படியானால் தங்கள் மேலான கவனத்திற்கு! நாம் நீர் பிடிப்பின் மேற்பகுதியில் தங்குவதே ஏற்றதாகும். நாம் கீழ் பகுதியில் இருந்தால் எதிரிகள் நமக்கு தண்ணீர் கிடைக்க விடாமல் தடுத்துக் கொள்வார்கள். மேலும், மழை பொழிந்தால் இந்த நீர்ப்பிடிப்பின் கீழ் பகுதி சேறும், சகதியுமாக இடையூறு ஏற்பட்டு விடும் என்று அத்தோழர் சொன்னார். அதை செவியுற்ற நபிகளார் அவரின் சமயோசித அறிவைப் பாராட்டியதோடு, அவரின் கருத்தை வரவேற்று செயல்படுத்தினார்கள். இஸ்லாமிய படை மேல்புறமும், இறைமறுப்பாளர் படை கீழ்புறமும் இருந்தார்கள். இரவு மழை பெய்தது. மேல்புறம் மணல்பாங்கான பூமி. கீழ்புறம் மண்சார்ந்த பூமியாதலால் சகதியாக எதிரிப் படை நடப்பதற்க்கே இடையூறாக அமைந்தது. இஸ்லாமியப் படை வென்றது. இது நாடறிந்த வரலாறு. அதன் அடித்தளம் ஆலோசனை என்னும் உயரிய நடைமுறை என்பதை மனதில் நிறுத்தி நாம் வாழும் வாழ்வில் தகுந்தவர்களிடம் (நல் மனிதர்) நல் ஆலோசனை பெற்று செயல்படுவோமானால் தோல்வி இல்லாத பரக்கத்தான வாழ்க்கை கிடைக்கப் பெறுவோம்! இன்ஷா அல்லாஹ்!

                ஆலோசனை என்ற கலந்தாலோசிக்கும் பழக்கம் நம்மிடம் நடைமுறையில் வந்துவிட்டால் தனி மனிதர்களிடம் பெருந்தன்மை, பணிவு என்ற உயரிய குணங்கள் குடி கொண்டுவிடும். அதுதான் உயர்ந்தோன் அல்லாஹ்வின் நோக்கம்!


அல்லாஹூ அக்பர்!!!


அனைத்தையும் இழந்தும்

இறைவன் மேல் நம்பிக்கை

இருந்தால், நீங்கள்

இழந்தது எதுவுமில்லை!

அனைத்தும் இருந்தும்

இறைவன் மேல் நம்பிக்கை

இல்லையெனில், உங்களிடம்

இருப்பது எதுவுமேயில்லை!


பாராட்டுவோம்....பார் போற்றிட....



அல்லாஹ்வின் குடும்பத்தை சேர்ந்த இனிமையானவர்களே!
 அஸ்ஸலாமு அலைக்கும்
           நாம் வாழும் இந்த நவயுகத்தில் முகநூல், வலைத்தளம் போன்ற கணினி யுகத்தில் சிறப்பான கருத்துக்கள், ஆச்சர்யப்படும் அரிய விசயங்கள் என பாராட்டப்பட வேண்டிய நிகழ்வுகள் பதியப்படுகிறது. பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
           இம்மாதிரியான செயல்களை இஸ்லாம் வரவேற்க்கிறதா? என சிலர் ஐயம் தெரிவிக்கிறார்கள். உலகிற்கு நல்ல பண்பாடுகளை அறிமுகப்படுத்திய இஸ்லாம், விமர்சனம் என்று சொல்லக்கூடிய மனம் திறந்து பாராட்டுதல், கருத்துக் கூறுதல் எனும் பண்பாட்டுக்கும் இஸ்லாமே முன்மாதிரியாக திகழ்கிறது.
           திருக்குர்ஆனையும், திருநபியின் சரித்திரத்தையும் ஆராய்ந்தால், அல்குர்ஆனும், அண்ணல் நபியும் விமர்சனம் (comment) நிகழ்த்தியிருப்பது நிறைய ஆச்சர்யத்தை அள்ளித்தருகிறது.

    சகாபாக்கள் பற்றி சத்திய வேதம்

           அண்ணலாரின் தோழர்களிடம் காணப்பட்ட சிறப்பியல்புகளை அல்லாஹ் மனம் திறந்து பாராட்டுவதை,

 مُّحَمَّدٌ۬ رَّسُولُ ٱللَّهِ‌ۚ وَٱلَّذِينَ مَعَهُ ۥۤ أَشِدَّآءُ عَلَى ٱلۡكُفَّارِ رُحَمَآءُ بَيۡنَہُمۡ‌ۖ تَرَٮٰهُمۡ رُكَّعً۬ا سُجَّدً۬ا يَبۡتَغُونَ فَضۡلاً۬ مِّنَ ٱللَّهِ وَرِضۡوَٲنً۬ا‌ۖ سِيمَاهُمۡ فِى وُجُوهِهِم مِّنۡ أَثَرِ ٱلسُّجُودِ‌ۚ ذَٲلِكَ مَثَلُهُمۡ فِى ٱلتَّوۡرَٮٰةِ‌ۚ وَمَثَلُهُمۡ فِى ٱلۡإِنجِيلِ كَزَرۡعٍ أَخۡرَجَ شَطۡـَٔهُ ۥ فَـَٔازَرَهُ ۥ فَٱسۡتَغۡلَظَ فَٱسۡتَوَىٰ عَلَىٰ سُوقِهِۦ يُعۡجِبُ ٱلزُّرَّاعَ لِيَغِيظَ بِہِمُ ٱلۡكُفَّارَ‌ۗ وَعَدَ ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّـٰلِحَـٰتِ مِنۡہُم مَّغۡفِرَةً۬ وَأَجۡرًا عَظِيمَۢا

48:29. முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராகவே இருக்கின்றார்; அவருடன் இருப்பவர்கள், காஃபிர்களிடம் கண்டிப்பானவர்கள், தங்களுக்கிடையே இரக்கமிக்கவர்கள். ருகூஃ செய்பவர்களாகவும், ஸுஜூது செய்பவர்களாகவும்; அல்லாஹ்விடமிருந்து (அவன்) அருளையும் (அவனுடைய) திருப்பொருத்தத்தையும் விரும்பி வேண்டுபவர்களாகவும் அவர்களை நீர் காண்பீர்; அவர்களுடைய அடையாளமாவது: அவர்களுடைய முகங்களில் (நெற்றியில்) ஸுஜூதுடைய அடையாளமிருக்கும்; இதுவே தவ்ராத்திலுள்ள அவர்களின் உதாரணமாகும், இன்ஜீலுள்ள அவர்கள் உதாரணமாவது: ஒரு பயிரைப் போன்றது; அது தன் முளையைக் கிளப்பி(ய பின்) அதை பலப்படுத்துகிறது; பின்னர் அது பருத்துக் கனமாகி, பிறகு விவசாயிகளை மகிழ்வடையச் செய்யும் விதத்தில், அது தன் அடித்தண்டின் மீது நிமிர்ந்து செவ்வையாக நிற்கிறது; இவற்றைக் கொண்டு நிராகரிப்பவர்களை அவன் கோப மூட்டுகிறான் - ஆனால் அவர்களில் எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் வாக்களிக்கின்றான்.      என்ற இத்திரு வசனம் தெளிவு படுத்துகிறது. இது போன்று பல திருவசனங்களில் நாயகத்தோழர்களின் சிறப்புக்கள் இடம் பெற்றிருக்கின்றது. 

மாநபியின் மனம் திறந்த பாராட்டு 
 
           தனது தோழர்களிடம் காணப்பட்ட தனித் திறமைகளை மனம் திறந்து பாராட்டும் பண்பாடு பெருமானார் (ஸல்) அவர்களிடம் அழகுற மிளிர்ந்திருந்தது.
                ஹழ்ரத் காலித் (ரலி) அவர்களின் திடமான வீரத்தை இவர் அல்லாஹ்வின் போர் வாள்களில் சிறந்த போர் வாள் என விமர்சித்து இருக்கிறார்கள்.
                ஹழ்ரத் பர்ரா பின் மாலிக் (ரலி) என்ற தோழரின் இறைநம்பிக்கையை பாராட்டி நபி (ஸல்) அவர்கள், அலங்கோலமான சிகை, புழுதி படர்ந்த மேனி, முரட்டு ஆடை அணிகலன்கள் கொண்டவர். இவருக்காக யாரும் எதிர்பார்த்து நிற்க்க மாட்டார்கள். ஆனால் இவர் அல்லாஹ்வின் மீது ஒன்றை சத்தியமிட்டுக் கூறினால் அல்லாஹ் அதை நிறைவு செய்யாமல் இருப்பதில்லை. என்று அவரின் இறையாண்மையைப் புகழ்ந்து கூறினார்கள்.
ஒரு கவிஞர் எழுதுகிறார்,

ஊக்குவிற்ப்பவன் ஊக்குவித்தால்
ஊக்கு விற்ப்பவன்கூட தேக்கு விற்ப்பான்!

                ஆகவே அன்பர்களே! விமர்சியுங்கள். அப்பொழுதுதான் சாதாரண மனிதன்கூட சாதனை படைப்பான்.



ஸலாம் மாற்று மதத்தினருக்குமா?




அல்லாஹ்வின் மாபெரும் அருளான ஈமானை பெற்ற முஃமினானவர்களே!
           இதுவரை ஸலாத்தின் சிறப்புகள் பற்றியும், யாருக்கு யார் முதலில் ஸலாம் சொல்வது பற்றியும் அறிந்து கொண்டோம். எல்லோருடைய மனதிலும் பொதுவாக உதிக்கக்கூடிய சந்தேகம் மாற்று மதத்தினரை சந்தித்தால் எப்படி முகமன் கூறுவது? அவர்கள் நாம் பயன்படுத்தும் அஸ்ஸலாமு அலைக்கும் என்று முகமன் கூறியவர்களாக நம்மை சந்தித்தால் நாம் எவ்வாறு பதிலுரைப்பது? என்பதற்குண்டான ஹதீஸ் விளக்கத்தை இந்த பதிவில் பார்ப்போம்.
           அஞ்ஞான காலத்தில் தோன்றிய அண்ணலார் (ஸல்) அவர்கள் அறிவிலிகள் வாழும் காலத்தில் அவதரித்ததே அதிசயம். இவ்வுலகின் ஒரே ஒரு அதிசயம்தான் அண்ணலார் அவர்கள்.
           அவர்களின் குணத்தைப் பற்றி அகிலங்களின் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கீழ்வரும் திருமறை வசனத்தில் கூறுகிறான்,
 وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ ۖ   فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ ۖ 3:159
3:159. அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;
                        இங்கு உயர்ந்தோன் அல்லாஹ் தன் தூதர் அவர்கள் காலத்தில் வாழ்ந்த சமுதாயத்தினரிடம் மிகப்பெரிய அன்புடன் நளினம் நிறைந்தவர்களாக இருந்தார்கள் என்பதை சொல்லிக் காட்டுகிறான். இந்த திருமறை வசனம் ஒன்றே அண்ணலின் குணத்திற்க்கு மிகப் பெரிய சான்று. அதாவது உயரிய நோபல் பரிசையும் மிஞ்சிய விருது.
           அண்ணலார் (ஸல்) அவர்களைப் பற்றி யூதர்களின் தவ்ராத் வேதத்திலும், கிருஸ்த்துவர்களின் இன்ஜீல் வேதத்திலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குண நலன்கள் பற்றி; அவர் கடுகடுப்பானவர் அல்லர்; கல் நெஞ்சக்காரரும் அல்லர்; கடைத்தெருவில் கூச்சலிடுபவரும் அல்லர்; ஒரு தீமைக்கு இன்னொரு தீமையால் தீர்வு காண மாட்டார். மாறாக அதை மன்னிப்பார். விட்டுக் கொடுப்பார். என்று முந்தய வேதங்களில் வந்திருப்பதாக அமர் பின் அல் ஆஸ்(ரலி) எனும் நபித் தோழர் அறிவிக்கிறார்கள்.
           இப்படிப் பட்ட அருங்குணத்தின் அதிசயம் அண்ணலார், அவர்கள் காலத்தில் வாழ்ந்த வேதக்காரர்களுக்கும் சரி, ஸலாம் எனும் முகமன் கூறியதில்லை. மாற்று மதத்தினர்கள் என்னதான் நண்பர்களாக இருந்தாலும் ஸலாம் எனும் சொர்க்கத்து மொழியை நாம் அவர்களுக்கு சொல்லக் கூடாது. அவர்களாக முந்திக் கொண்டு நமக்கு அஸ்ஸலாமு அலைக்கும் என்று முகமன் கூறினால், வஅலைக்கும் என்று மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும்.
           அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
انّ رسول الله (صلعم) قال اذا سلّم عليكم اهل الكتاب فقوالو وعليكم؛
           வேதக்காரர்கள் உங்களுக்கு ஸலாம் கூறினால் ‘‘வஅலைக்கும்’’ நீங்கள் சொன்னது உங்களுக்கும் நேரட்டும் என்று பதில் கூறுங்கள். என்று ஏந்தல் நபி(ஸல்) அவர்கள் ஏவியுள்ளார்கள். ஆகவே அன்பர்களே! மாற்று மதத்தினருக்கு ஸலாம் எனும் முகமன் தேவையில்லை. முகமலர்ச்சியுடன் புன்முறுவல் ஒன்றுடன் உறவாடலாமே!
           அல்லாஹ் நம் அனைவருக்கும் அனைத்து நன்மைகளையும் தந்தருள்வானாக! ஆமீன்!

 
Download this Blogger Template From Coolbthemes.com