ஸலாம் மாற்று மதத்தினருக்குமா?




அல்லாஹ்வின் மாபெரும் அருளான ஈமானை பெற்ற முஃமினானவர்களே!
           இதுவரை ஸலாத்தின் சிறப்புகள் பற்றியும், யாருக்கு யார் முதலில் ஸலாம் சொல்வது பற்றியும் அறிந்து கொண்டோம். எல்லோருடைய மனதிலும் பொதுவாக உதிக்கக்கூடிய சந்தேகம் மாற்று மதத்தினரை சந்தித்தால் எப்படி முகமன் கூறுவது? அவர்கள் நாம் பயன்படுத்தும் அஸ்ஸலாமு அலைக்கும் என்று முகமன் கூறியவர்களாக நம்மை சந்தித்தால் நாம் எவ்வாறு பதிலுரைப்பது? என்பதற்குண்டான ஹதீஸ் விளக்கத்தை இந்த பதிவில் பார்ப்போம்.
           அஞ்ஞான காலத்தில் தோன்றிய அண்ணலார் (ஸல்) அவர்கள் அறிவிலிகள் வாழும் காலத்தில் அவதரித்ததே அதிசயம். இவ்வுலகின் ஒரே ஒரு அதிசயம்தான் அண்ணலார் அவர்கள்.
           அவர்களின் குணத்தைப் பற்றி அகிலங்களின் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கீழ்வரும் திருமறை வசனத்தில் கூறுகிறான்,
 وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ ۖ   فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ ۖ 3:159
3:159. அல்லாஹ்வுடைய ரஹ்மத்தின் காரணமாகவே நீர் அவர்களிடம் மென்மையாக (கனிவாக) நடந்து கொள்கிறீர்; (சொல்லில்) நீர் கடுகடுப்பானவராகவும், கடின சித்தமுடையவராகவும் இருந்திருப்பீரானால், அவர்கள் உம் சமூகத்தை விட்டும் ஓடிப்போயிருப்பார்கள்;
                        இங்கு உயர்ந்தோன் அல்லாஹ் தன் தூதர் அவர்கள் காலத்தில் வாழ்ந்த சமுதாயத்தினரிடம் மிகப்பெரிய அன்புடன் நளினம் நிறைந்தவர்களாக இருந்தார்கள் என்பதை சொல்லிக் காட்டுகிறான். இந்த திருமறை வசனம் ஒன்றே அண்ணலின் குணத்திற்க்கு மிகப் பெரிய சான்று. அதாவது உயரிய நோபல் பரிசையும் மிஞ்சிய விருது.
           அண்ணலார் (ஸல்) அவர்களைப் பற்றி யூதர்களின் தவ்ராத் வேதத்திலும், கிருஸ்த்துவர்களின் இன்ஜீல் வேதத்திலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குண நலன்கள் பற்றி; அவர் கடுகடுப்பானவர் அல்லர்; கல் நெஞ்சக்காரரும் அல்லர்; கடைத்தெருவில் கூச்சலிடுபவரும் அல்லர்; ஒரு தீமைக்கு இன்னொரு தீமையால் தீர்வு காண மாட்டார். மாறாக அதை மன்னிப்பார். விட்டுக் கொடுப்பார். என்று முந்தய வேதங்களில் வந்திருப்பதாக அமர் பின் அல் ஆஸ்(ரலி) எனும் நபித் தோழர் அறிவிக்கிறார்கள்.
           இப்படிப் பட்ட அருங்குணத்தின் அதிசயம் அண்ணலார், அவர்கள் காலத்தில் வாழ்ந்த வேதக்காரர்களுக்கும் சரி, ஸலாம் எனும் முகமன் கூறியதில்லை. மாற்று மதத்தினர்கள் என்னதான் நண்பர்களாக இருந்தாலும் ஸலாம் எனும் சொர்க்கத்து மொழியை நாம் அவர்களுக்கு சொல்லக் கூடாது. அவர்களாக முந்திக் கொண்டு நமக்கு அஸ்ஸலாமு அலைக்கும் என்று முகமன் கூறினால், வஅலைக்கும் என்று மட்டும்தான் பதில் சொல்ல வேண்டும்.
           அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்,
انّ رسول الله (صلعم) قال اذا سلّم عليكم اهل الكتاب فقوالو وعليكم؛
           வேதக்காரர்கள் உங்களுக்கு ஸலாம் கூறினால் ‘‘வஅலைக்கும்’’ நீங்கள் சொன்னது உங்களுக்கும் நேரட்டும் என்று பதில் கூறுங்கள். என்று ஏந்தல் நபி(ஸல்) அவர்கள் ஏவியுள்ளார்கள். ஆகவே அன்பர்களே! மாற்று மதத்தினருக்கு ஸலாம் எனும் முகமன் தேவையில்லை. முகமலர்ச்சியுடன் புன்முறுவல் ஒன்றுடன் உறவாடலாமே!
           அல்லாஹ் நம் அனைவருக்கும் அனைத்து நன்மைகளையும் தந்தருள்வானாக! ஆமீன்!

0 கருத்துகள்:

 
Download this Blogger Template From Coolbthemes.com