ரமழானை வரவேற்போம் வாருங்கள்!




அஸ்ஸலாமு அலைக்கும்! (வரஹ்)
           நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவு) புத்தகத்தில் வானங்களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டு ஆகும். அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவை. இதுதான் நேரான மார்க்கமாகும். (9;36)
           புனித மாதங்கள்என அல் குர்ஆன் புகழ்ந்திடும் நான்கு புண்ணிய மாதங்களில் ஒன்றே ரஜப் மாதம். துல்காயிதா, துல்ஹஜ் என ஆண்டின் இறுதியில் இரண்டு மாதங்களும், மறு ஆண்டின் துவக்கத்தில் வரும் முகர்ரம் மாதமும் மற்ற மூன்று மாதங்களாகும்.
           தர்ஜூப்என்ற சொல்லிலிருந்து பிறந்த ரஜப் என்ற சொல்லுக்கு மரியாதைக்குரியது என்று பொருள். சிறப்பளிக்கப்பட்ட ஒரு மாதத்தைரஜப் ஹாதஷ்ஷஹ்ர்என குறிப்பிடுவார்கள். ஒரு காரியத்திற்காக தயாரிப்புகள் செய்வதற்கும் தர்ஜூப் என்று சொல்லப் படுவதுண்டு.
           கண்ணியமிக்க ஷஅபான், மகிமை மிக்க ரமழான் மாதங்களுக்கு முன்னோடியாக வரும் ரஜபின் பிறையை கண்டதிலிருந்து அண்ணல் எம்பெருமான் (ஸல்) அவர்கள்,

اللّهمّ بارك لنا في رجب وشعبان وبلّغنا رمضان

எங்கள் இறைவனே! இந்த ரஜப், ஷஅபான் மாதங்களில் உன் அருளை எங்களுக்குப் பெருகச் செய்து ரமழானை நாங்கள் அடைய கிருபை செய்வாயாக!’ என அதிகம் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள் என்று நபித் தோழர் ஹழரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
           இவ்வுலக வாழ்க்கையில் எந்த ஒரு காரியத்திற்கும் திட்டமிடுதலும் அதற்குண்டான தயாரிப்புகளும் இல்லையென்றால் நாம் செயல்படுத்தவிருக்கும் காரியம் முழுமை பெறாமல் போய்விடும்.
           நாம் வாழும் இவ்வுலக சொற்பகால வாழ்க்கையில் முடிவில்லா நித்திய வாழ்க்கைக்குண்டான திட்டமிடுதலும் தயாரிப்பும் இருக்க வேண்டும்.
           நித்திய நிரந்தர வாழ்க்கைக்குண்டான நற்செயல்களும், உயர்ந்தோன் அல்லாஹ்வின் மட்டிலடங்கா அருள்களும் ரஜப் ஷஅபானுக்கு அடுத்து வரும் ரமழான் என்ற புனித மாதத்தை எவ்வளவுக்கெவ்வளவு பயன்படுத்திக் கொள்ள முடியுமோ அவ்வளவுக்கவ்வளவு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
           அதற்குண்டான வழிமுறையைத்தான் அண்ணல் எம்பெருமான் மேற்கண்ட துஆவில் நமக்கு வழி காட்டுகிறார்கள்.
           ஆம் அன்பர்களே! நாம் என்னதான் ஆசை ஆசையாய் ரமழானில் முழு மாதமும் நோன்பு நோற்றாலும் நம்மையும் மறந்து சின்ன சின்ன தவறுகள் செய்து விடுகின்றோம். இறவு வணக்கத்திலும், மற்ற உபரி வணக்கங்களிலும் தொய்வடைந்து விடுகின்றோம். இக்குறைபாடுகள் இல்லாமல் ரமழான் மாதத்தின் அல்லாஹ்வின் அருட்கொடைகளை முழுமையாக அள்ளிக் கொள்ள ஆசை, ஆர்வம் மட்டும் போதாது, உயர்ந்தோன் அல்லாஹ்வின் உதவியும் வேண்டும்.
           அல்லாஹ்வின் உதவியை பெற அண்ணலார் காண்பித்த எளிய வழிதான் பிரார்த்தனை. இப்புனித மாதத்தில் இறைவனிடம் நாம் ரமழானை முழுமையாக அடைந்து கொள்ள அதிகம் பிரார்த்திப்போம்!

اللّهمّ بارك لنا في رجب وشعبان وبلّغنا رمضان

0 கருத்துகள்:

 
Download this Blogger Template From Coolbthemes.com